Sunday, January 30, 2011

வெகுசனத் தளத்தில் சிறுபத்திரிக்கை

வெகுசன மக்களால் அதிகம் பரிசயமற்ற நிலையில், கல்விநிலையங்கள் குறிப்பாகப் பல்கலைக்கழக நிறுவனங்களில் சிறுபத்திரிக்கைகள் குறித்த அறிமுகமும் வாசிப்பும் முன்னெடுக்கப்பட்டன. இவை அறிவார்ந்த தளத்தில் தங்களை முன்னிறுத்திக் கொண்டு செயல்படுவது இதன் நோக்கமா என்பது கேள்வியாக எழுகிறது. சிற்றிதழ்களின் போக்கு என்பது ஒரு குறிப்பிட்ட சூழலை அல்லது குழுவை மட்டும் மையமாகக் கொண்டு இயங்குவது என்பது சிறுபத்திரிகைகளின் தோற்றம் முதலே எழுதப்படாத இலக்கணமாக உள்ளது. இந்தப் பின்புலத்தோடு இன்றைய நிலையிலுள்ள சிறுபத்திரிக்கைகளின் போக்கினை ஆராய முற்படுகையில் அவை நீர்த்துப்போனதற்கான காரணங்களை ஒருவாறு ஊகிக்க இடமுண்டு.
வெகுசன இதழ்கள் என்பன வெகுமக்கள் சார்ந்து (சில கமர்ஷியல் தன்மைகள்) இயங்குவது போல சிறுபத்திரிக்கைகளும் தனக்கே உரிய சில இலக்கண வரையறைகளை கொண்டு இயங்குகின்றன. லாபநோக்கமற்ற நிலையில் இலக்கியம், சமூகம் போன்றவை சார்ந்து சில முன்முயற்சிகளை எடுத்துரைப்பதாக அமைகின்றன. தொடக்க காலச் சிறுபத்திரிகைகள் ஒரு இயக்கமாகவே செயல்பட்ட வரலாறும் இங்கு உள்ளது. இன்றைய சூழலில் இயக்கநிலை சார்ந்து சிறுபத்திரிக்கைகள் எழாத நிலையையும் அவற்றில் எதிர்வினை போக்குகள் இன்மையையும் கருத்தில் கொண்டால் சில உண்மைகளை அவதானிக்கலாம்.
சிறுபத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளர்கள் சிலர் வெகுசன இதழ்களிலும் எழுதுகின்றனர். எதற்காக அவர்கள் எழுதுகின்றனர், எந்த மாதிரியான எழுத்துகளை அவர்களிலிடமிருந்து வெகுசன இதழ்கள் பெறுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். வெகுசன இதழ்களில் எழுதுவதற்கு பிரபலமடைய வேண்டும் என்ற ஒரு காரணம் தான் இருக்க முடியும் என்று ஒருவாறு ஊகிக்க இடமுண்டு. எழுத்தாளர்களின் எழுத்து மாற்றம் நிகழாமல் வெகுசன இதழ்களில் எழுத முடியாத சூழலில் எதற்காக இவர்கள் வெகுசனத்தை நோக்கி எழுதுகின்றனர். இச்சூழலில் தான் சிற்றிதழ்களில் இவர்கள் எழுதும் எழுத்தை அறிவார்ந்த நிலையில் கட்டமைக்கும் சிறுபத்திரிக்கை வாசிப்பு மனநிலை ஏற்க மறுக்கும் சூழல் உருவாகிறது. வெகுசனம் மற்றும் சிற்றிதழ்களில் எழுதும் ஒரே எழுத்தாளன் தன் எழுத்துகளை மாற்றி எழுதும் போக்கு நியாயமானதா? இருநிலைகளிலும் செயல்படும் எழுத்தாளர்களின் இதுபோன்ற போக்குகள் எவ்வாறு சாத்தியம். வெகுசன இதழ்களில் எழுதும் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துமுறையை மாற்றிக்கொண்டு அதற்கான தகுதிபாடுகளோடு வெகுசன இதழ்களில் எழுதுவது சிந்திக்கத்தக்கது. இதனால் சிற்றிதழ்கள் கட்டமைத்துக் கொண்ட வரையறைகள் போன்றவை நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை உள்வாங்கி கொண்டு இன்று இடைநிலைப்பட்ட இதழ்களாக வெளிவருகின்றன இது ஒருபுறம்.
வெகுசன இதழ்களோடு சிறுபத்திரிக்கைகள் போட்டிபோடாமல் மக்களுக்காகச் சிறுபத்திரிகைகள் இயங்க மறுப்பதும் அறிவார்ந்த தளங்கள் மட்டும் சிறுபத்திரிகைகளை வாசிக்க முடியும் என்று கட்டமைப்பதும் கல்வியறிவு நம் சமூகத்தில் இன்றும் முழுமையடையவில்லை என்ற எண்ணத்தையோ அல்லது இன்னும் வெகுசனங்களை முட்டாள்களாக எண்ணும் மனநிலையே தொடர்வதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.
வெகுசன மக்கள் வாசிக்கும் இதழ்களாக சிறுபத்திரிக்கைகளை உருமாற்ற முடியாத நிலை மாற வேண்டும். மக்களிடம் சிறுபத்திரிக்கைகளைக் கொண்டு சேர்க்கவேண்டும். சிறுபத்திரிகையை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் போக்கு இன்மை அதனை ஒரு அறிவுபாரம்பரியம் மிக்க அறிவார்ந்த தளத்தில் வைத்து மட்டும் வாசிக்கும் போக்கு இன்றைய சிறுபத்திரிக்கைகளின் தோய்வை களைவதற்கான வழியாகவும் அமையலாம். எழுத்தாளர்களை அங்கீகாரம் செய்யும் வெகுசன இதழ்களும், பத்திரிகைகளும் அவர்களுடைய சிறுபத்திரிக்கைகுரிய எழுத்துகளை மட்டும் அங்கீகரிக்காத சூழல் என்பதையும் சிறுபத்திரிக்கை வரலாறு படிக்க தொடங்கிய நாள் முதல் மனதில் வினாவாக எழுந்து வந்துள்ளது. ஆனால் அங்கீகரிக்காத நிலை என்பதை யார் தீர்மானித்தார்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி கூட எடுக்காமல் அவர்களுடைய வாசிப்பு இதுவாகத் தான் இருக்கும் என்று முடிவு செய்யும் அதிகார வர்க்கத்தின் போக்கைத் தான் இங்கு நாம் இனங்காணமுடிகின்றது.
சிறுபத்திரிக்கைகள் என்பது தொடக்க காலத்தில் எதற்காகத் தோற்றம் பெற்றன. வெகுசன இதழ்களின் போதாமையா? கருத்து சுதந்திரத் தடையா? சிறுபத்திரிக்கைக்குரிய அடையாளம் என்ன? விளம்பரங்கள் இடம்பெறாமல் வணிகநோக்கில் தங்கள் செயல்பாடுகளை முன்னெடுக்காமல் இலக்கியத்திற்கும் மொழிக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இவற்றை இனங்காணலாமா? என்ற கேள்விகளுக்கு விடையாக இன்றைய சிறுபத்திரிக்கைகள் வெளிவருகின்றனவா என்பதே கேள்விக்குறி தான். இன்றைய சிறுபத்திரிக்கைகள் வணிகநோக்கத்துடன் செயல்படாமல் உள்ளதா? விளம்பரங்கள் இடம்பெறாமல் இருப்பினும் பதிப்பகங்களாகத் தன் வணிக உத்தியை தனக்கே உரிய முறையில் கையாள்வது சுவாரஸ்யமானது. (காலச்சுவடு – காலச்சுவடு பதிப்பகம், உயிர்மை – உயிர்மை பதிப்பகம்)
பொது மக்கள் வாசிப்புக்கான இதழ்கள் மலைமலையாகக் குவிந்துகிடக்கும் போது எதற்காக வெகுசனத்தை நோக்கி சிற்றிதழ்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கேள்வி தேவையில்லாத ஒன்று. சினிமாவில் அண்மைகாலமாக நிகழும் மாற்று பார்வை கொண்ட சில படங்கள் வெகுசனத்தளத்தில் வெற்றிப்பெறவில்லையா? காட்சி மாற்றத்தை ஏற்கும் வெகுசனம் எழுத்து மாற்றத்தை ஏற்கும் சூழலை ஏற்படுத்த வேண்டிய சூழலில் இன்று சிறுபத்திரிக்கைகள் உள்ளன. வெகுசனமாக மாற்றமடைந்து இன்று இடைப்பட்ட நிலையில் தரத்தை இழந்த நிலையில் உள்ள சிற்றிதழ்கள் எதற்காக ஒரு எல்லைக்குள் முடங்கிவிடுகின்றன. இதற்குப் பதிலாகத் தன் எல்லைகளை விரித்துக் கொண்டு சிறுபத்திரிக்கை, வெகுசனப் பத்திரிக்கை என்ற பார்வையை விலக்கி மாற்று சிந்தனைகளை உள்வாங்கிய இதழ்களையும், பத்திரிக்கைகளையும் நடத்த வேண்டிய தேவை ஒருபுறமும் பொதுவாசகனை நோக்கிய நிலையில் வெளிவர வேண்டிய சூழலையும் கருத்தில் கொண்டு எழுத்து ஊடகம் செயல்பட வேண்டும்.
வாசிப்பு, அறிவுப்பாரம்பரியம், வளர்ச்சி போன்றவை ஒரு இனத்தின் ஒரு பகுதியில் இருப்பதாகக் கற்பனைச் செய்வது பல்வேறு முடிவுகளுக்கு நம்மை இட்டுச்செல்கின்றது என்பதைக் கருத்தில் கொள்வது நலம் பயக்கும்.